Friday, December 7, 2012

WHY WE DEMAND 7TH PAY COMMISSION ?

ஏழாவது ஊதியக்குழு  ஏன் வேண்டும்  ?  
காரணங்களைப் புரிந்துகொள்ளலாமா ?
                                                                 
1.1.2011 முதல் ஊதிய விகிதங்கள் மாற்றம் செய்திடுக:

வேலைநிறுத்தத்தின் முதல் கோரிக்கை 1.1.2011 முதல் அடுத்த ஊதிய மாற்றங்கள் அமுல்படுத்தப்படவேண்டும் என்பதாகும். அதாவது பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களைப் போலவே ஒவ்வொரு ஐந்தாண்டு இடைவெளியில் மத்திய அரசு ஊழியர் ஊதியங்களும் திருத்தி அமைக்கப்படவேண்டும் என்பதே கோரிக்கையாகும். பத்தாண்டுகள் அல்லது அதற்கு மேலான கால அவகாசத்தில்தான் ஊதிய மாற்றம் என்ற நிலையை இனிமேலும் ஏற்க இயலாது என்பதே மகாசம்மேளனத்தின் நிலை. இதற்குக் காரணங்கள் பல உண்டு. முக்கியமாகப் பல்வித வழிகளில் மத்திய அரசு ஊழியர்களை ஆறாம் ஊதியக்குழுவும் அரசும் ஏமாற்றியிருப்பதை சரிசெய்ய வேறுவழி எதுவும் இல்லை.


முதல் ஊதியக்குழு காலத்தில் இருந்து நிலவிவந்த ஒவ்வொரு கேடருக்கும் தனித்தனியான ஊதிய விகிதம் என்னும் நடைமுறையை ஆறாம் ஊதியக்குழு தலைகுப்புற மாற்றியது. பல கேடர்களுக்கும் ஒரே ஊதிய பேண்ட் என்றும், அவர்களின் கிரேடு ஊதியம் மட்டும் சற்றே மாறுபட்டிருக்கும் என்பதுமான மோசமான முறையைப் புகுத்தியது. இம்முறை 1.1.2006 முதல் அமுலாக்கப்பட்டது; திருத்தப்பட்ட அலவன்சுகள் 1.9.2008 முதல் அமுலாக்கப்பட்டன. இதனால் பல கேடர்களும் தங்கள் சரியான தகுதியை இழந்து நிற்கின்றன. குறிப்பாக முந்தைய நான்காம் பிரிவு ஊழியரில் இருந்து சூபர்வைசர் ஊழியர் வரை அனைவரும் ஒரே ஊதிய விகிதத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.


தேவைக்கேற்ற குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படுவதில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் நான்காம் பிரிவு ஊழியருக்கு வழங்கவேண்டிய குறைந்த பட்ச அடிப்படை ஊதியமான ரூ.10,000/- என்பதை மறுத்து, தகுதி உயர்த்தப்பட்ட எம்.டி.எஸ் என்னும் மூன்றாம் பிரிவு ஊழியருக்கே ரூ.7000/- மட்டுமே அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பெரிய திறமை எதுவும் தேவையற்ற பணிகளுக்கான குரூப் ‘டி’ ஊழியர்களின் ஊதியத்தை விட மோசமான ஊதியத்தை உயர் திறமை தேவைபடும் பணிகளைச் செய்யும் மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்கு ஆறாம்  ஊதியக்குழு நிர்ணயித்துச் சென்றுள்ளது.


கடந்த காலங்களிலெல்லாம் உண்மை ஊதியத்தின் தேய்மானத்தோடு சம்பந்தப்பட்டதாக புதிய ஊதிய உயர்வு அமைந்திருந்தது. பொருளாதாரத்தில் நிலவும் பணவீக்கத்தின் அளவானது உண்மை ஊதியத்தின் தேய்மானத்தின் வேகத்தைத் தீர்மானிக்கிறது. மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை தீர்மானிக்கக்  கணக்கில் எடுக்கப்படும் பண்டங்களின் சில்லறை விலைகள் 1.1.2006-க்கும் 1.1.2011-க்கும் இடைப்பட்ட இக்காலத்தில் 160 சதவீத அளவிற்குக் கடுமையாக உயர்ந்துள்ளது; 


ஆனால் 1.1.2011 முதல் வழங்கப்படும் கிராக்கிப்படி அளவோ வெறும் 51 சதவீதம் மட்டுமே. இதனால் ஒவ்வொரு மத்திய அரசு ஊழியருக்கும் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் மாதந்தோறும் இழப்பாகிக்கொண்டிருக்கிறது. அதாவது ஒவ்வொருவரின் அடிப்படை ஊதியம் [ஊதிய பேண்ட் அளவு + கிரேடு ஊதியத்தின் கூட்டுத்தொகை] என்னவோ அதே அளவு மாதாமாதம் இழப்பு ஏற்படுகிறது. இதற்குக் காரணமே பண்டங்களின் சில்லறை விற்பனை விலைகளைத் தவறாகக் கணக்கிடும் விலைவாசிப் புள்ளி கணக்கீடு முறையே ஆகும். இதேபோல் மொத்த வர்த்தக விலையை விடப் பண்டங்கள் சில்லறை விலையில் குறைந்தது 60 சதம் உயர்வதைக் கணக்கிலெடுக்காமல், உயர்வை வெறும் 20 சதமாக ஆறாம் ஊதியக்குழு முடிவெடுத்ததால்தான் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயிப்பே பெரும் இழப்பாக ஆகிப்போனது. அந்த இழப்பு தொடர்கதையாகி மாதந்தோறும் பெரும் இழப்பாக மாறியுள்ளது. இதை மீண்டும் ஊதிய விகிதங்களை திருத்துவதால் மட்டுமே சரிசெய்ய இயலும்.


இந்த அநீதிகள் தவிரக் கூடுதலாக அதிகாரிகளுக்கு ஒரு நியாயம், தொழிலாளிக்கு ஒரு நியாயம் என்கிற தோரணையில் ஆறாம் ஊதியக் குழு வஞ்சகமாகச் செயல்பட்டதையும் நாம் காணமுடிகிறது. குரூப் பி, சி, டி பிரிவு ஊழியர்களுக்கெல்லாம் ஊதியத் திருத்தமென்பதில் வெறும் 1.86 சத ஊதிய உயர்வு மட்டுமே என்று நிர்ணயித்த ஊதியக்குழு, குரூப் ’ஏ’ ஊழியர்களுக்கு மட்டும் 2.36 முதல் மூன்று சதம் வரை ஊதிய உயர்வை அனுமதித்தது. அத்துடன் புதிய ஊதிய விகிதத்தில் பொருத்தும்போது குரூப் பி, சி, டி ஊழியருக்கு வெறும் 40 சத ஊதிய உயர்வு என்றும், குரூப் ‘ஏ’ அதிகாரிகளுக்கு மட்டும் 42 முதல் 49 சதம் வரை வழங்கியது. ஆறாம் ஊதியக்குழு பரிந்துரைகளை அமுலாக்கும்போது மத்திய அரசு இந்த அநியாயத்தை மேலும் அதிகரிக்கும் விதத்தில் பல நடவடிக்கைகளை எடுத்தது.


இவை தவிர இனி அரசுப் பணியில் மெட்ரிகுலேஷன் கல்வித் தகுதி இல்லாதவர்கள் நுழையவே முடியாத நிலையை ஊதியக்குழுவும் அரசும் உருவாக்கியதானது, ஒரு மக்கள் நல அரசு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கையே அல்ல. மூன்றில் ஒருபகுதி மக்கள் கல்வி அறிவற்ற நிலையில் வாழும் நாட்டில் இவ்வாறு ஒரு முரண்பட்ட பரிந்துரையை அமுலாக்கியதன் மூலம் அடித்தட்டு சமுதாய மக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய தன் கடமையில் இருந்து அரசு நழுவிச் செல்வதையே உணர்த்துகிறது.


இவ்வாறாக  உருவாக்கப்பட்ட பல்வித ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய கூட்டு ஆலோசனைக்குழு அமைப்பிற்குள்ளாக அமைக்கப்பட்ட தேசிய ஊதிய முரண்பாட்டுக் குழு எந்த அடிப்படை முரண்பாட்டையும் சரிசெய்ய முன்வரவில்லை. நான்கைந்து முறை  கூடிக் கலைந்த பின்பும் ஊழியர் தரப்பின் நியாயமான வாதங்களை ஏற்க அரசுத் தரப்பு மறுத்து வருகிறது.


நான்காம் ஊதியக்குழு தெளிவாக ஈ.டி ஊழியர்களின் ஊதியப் பரிசிலனை செய்யும் பணியை தன்னிடமே அஞ்சல் இலாகா விட்டிருக்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்டியிருந்தது ஆனால் அஞ்சல் துறை சார்ந்த மூன்று லட்சம் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் ஊதிய உயர்வைப் பரிசீலிக்கும் பணியை ஆறாம் ஊதியக்குழுவிற்கு நிர்ணயிக்கக் கூடாது என்பதில் அஞ்சல் இலாகா குறியாய் செயல்பட்டது.. அத்துடன் நீதிபதி தலைமையில் அவர்களுக்கான ஊதியக் குழு அமைவதையும் தடுத்தது. பணி ஓய்வு பெற்ற நடராஜமூர்த்தி என்னும் ஒரு அதிகாரியைத் தலைவராகக் கொண்ட ஒருநபர் குழுவை அமைத்து, வழக்கம் போல் அதிகாரவர்க்கத்திற்கே உடைய குறுகிய பார்வையோடு செயல்பட்டு பெரும் அநீதியை வழங்கியது புதிதாக அமையும் 7-வது ஊதியக்குழுவே ஜி.டி.எஸ் ஊழியரின் ஊதிய விவகாரங்களையும் பணிநிலைகளையும் பரிசீலிக்குமாறு பணிக்கப்படவேண்டும்.


இக்காரணங்களால், மத்திய அரசு உடன் 7-வது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும். புதிய ஊதியத் திருத்தத்தை 1.1.2011 முதல், அதாவது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்ற கொள்கையின் அடிப்படையில் உயர்த்தி அமைக்க முன்வரவேண்டும் என்பதே 12.12.12 வேலைநிறுத்தத்தின் முழுமுதற் கோரிக்கையாகும்.

                                                           .......... தொடரும்