மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழக ஆலோசனைக் கூட்டம் இன்று ( 20.03.2014 ) மாலை சுமார் 06.00 மணியளவில் மாநிலக் கணக்காயர் அலுவலக வளாகத்தில் , மாநிலத் தலைவர் தோழர். J. இராமமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாநிலப் பொருளாளர் தோழர் . சுந்தரமூர்த்தி ( வருமான வரித்துறை) அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த , அஞ்சல் பகுதியின் தபால்காரர் சங்கத்தின் மறைந்த முன்னாள் மாநிலச் செயலர் தோழர் கோபு கோவிந்தராஜன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி கூட்டம் துவங்கியது. தொடர்ந்து மாநிலத் தலைவர் தோழர். J. ராமமூர்த்தி அவர்கள் கூட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்கள். தொடர்ந்து பொதுச் செயலாளர் தோழர். M. துரைபாண்டியன் அவர்கள் மகா சம்மேளனத்தின் போராட்ட வீச்சு குறித்தும் இன்றைய அரசியல் நிலை குறித்தும் , தேர்தலுக்கு பின்னர் நடைபெற உள்ள நிகழ்வுகள் குறித்தும் , நமது கடமை குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினார்கள்.
கூட்டத்தில், கடந்த பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற்ற மகா சம்மேளனத்தின் 48 மணி நேர வேலை நிறுத்தம் தமிழத்தில் அனைத்து மத்திய அரசு ஊழியர் அரங்கிலும் முழு வெற்றி பெற்றதற்கு அனைத்து பகுதி பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப் பட்டது . மேலும் எதிர்வரும் ஏப்ரல் திங்கள் 04 ஆம் தேதி நாக்பூர் நகரில் நடைபெற உள்ள மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சிறப்பு கருத்தரங்கத்தில் , தமிழக பகுதியில் இருந்து , அனைத்து துறைகளில் இருந்தும் பெரும் அளவில் நிர்வாகிகள் கலந்து கொள்வதென முடிவு மேற்கொள்ளப் பட்டது.
அடுத்து அறிவிக்கப் பட உள்ள ஊதியக் குழு கோரிக்கைகள் தொடர்பான கால வரையற்ற வேலை நிறுத்தத்தை தமிழகத்தில் சிறப்பாக நடத்திட ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கூட்டத்தில் , வருமான வரித்துறை, கலால் துறை, சுங்க வரித்துறை, தபால் துறை, கணக்காயர் அலுவலகம் , அணு சக்தி துறை, ராஜாஜி பவன் மற்றும் சாஸ்த்ரி பவன் அரசு அலுவலகங்களின் கூட்டமைப்புகள் , CGHS உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 60 நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். நமது அஞ்சல் பகுதியில் இருந்து அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். ரவிச்சந்திரன் , RMS மூன்றின் மாநிலச் செயலர் தோழர். K. சங்கரன், கணக்குப் பிரிவு மாநிலத் தலைவர் தோழர். சந்தோஷ்குமார் , GDS மாநிலச் செயலர் தோழர் தனராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இறுதியில் தமிழக மகா சம்மேளனத்தின் உதவிச் செயலர் தோழர். K. சங்கரன் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.