Saturday, September 3, 2011

ATLAST WE WON THE LEGAL BATTLE - A VICTORY TO DEMOCRACY

                                   ஜனநாயகத்திற்கு  கிடைத்த வெற்றி ! 
                                  காலம் கடந்தாலும் நீதியே வென்றது !

அஞ்சல் ஊழியர் தொழிற் சங்கத்தின் வரலாற்றில் இதுவரை இல்லை !
3 1/2 ஆண்டுகளில் 3 மாநில மாநாடுகள் !  ஆம் ! திருநெல்வேலியிலும் வேலூரிலும்  பின்னர் கவரப்பேட்டையிலும் -  நம் தமிழ் மாநில அஞ்சல் 
மூன்று சங்கம் , மூன்று மாநாடுகளைக் கண்டது.  அனைத்திலும் மிகப் 
பெரும்பான்மை கோட்ட/ கிளைச் சங்கங்களின் ஆதரவோடு 
ஜனநாயாக பூர்வமாக  வெற்றிகளை நாம் பெற்றோம்.

ஆனாலும் சூது மதியினர் , தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் 
ஊழியர் குறை தீர்க்கும் அமைப்பாக வாழ்வதை விட , தனி நபரின்
கைப்பாவையாக  வாழ்வதையே  விரும்பினர் . மக்கள் மன்றமாம் 
மாநாடுகளை  அவர்கள் விரும்பவில்லை . அதனால் தான் வேலூர் 
மற்றும் கவரப்பேட்டை மாநில மாநாடுகளைப்  புறக்கணித்தனர். 

 உச்சமட்ட அமைப்பான  22 மாநிலச் சங்கங்கள் மற்றும் 15அகில 
இந்திய சங்க நிர்வாகிகள் அடங்கிய அகில இந்திய செயற் குழுவை 
விரும்பவில்லை. அகில இந்திய செயற்குழுவில் அவர்கள் அழைக்கப்பட்டபோதும்  அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தனர் .

மிகவும் உச்ச மட்ட அமைப்பான  அகில இந்திய மாநாட்டில் 
புதிய தேர்தல் நடத்திட ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றி, 
அதன்பால் நடத்தப்பட்ட மூன்றாவது மாநாட்டையும் 
புறக்கணித்தனர்.

சங்கத்தைத் தாண்டி தனி  நபர் வாழ்வே முக்கியம் என்று
தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளவே ஆவேசம்
கொண்டனர். சங்கம் அழிந்தாலும் தான் வாழ்ந்திட ஆசை
கொண்டனர்.

தனிநபர் கைப்பாவையாக சந்து பொந்துகள் முதல் சரித்திரத்
தலை நகராம் டெல்லி வரை , அவர்கள் சார்ந்த கோட்ட/ 
கிளைகள் முதல்  சென்னைக் கோட்டை தலைமையகம் வரை
எங்கு நோக்கினும்  நீதி மன்ற வழக்குகள் . திருவண்ணமலையில் 
4 , பட்டுக்கோட்டையில் 4, திருநெல்வேலியில் 3,  GPO , 
கடலூர் ,  தஞ்சை 2 , மதுரை உயர் நீதி மன்றம் ,  மேட்டுப்பாளையம்  3 ,
வள்ளியூர் , நாகர்கோயில் , மத்திய  சென்னை  , கும்பகோணம்,
மதுரை 3 .......... இத்தியாதி ..... இத்தியாதி  என எங்கு நோக்கினும் ...
வகை வகையாக .... மாநில .... மத்திய சங்கங்களை 
இழுத்து  மொத்தம் 47   வழக்குகள் .  அத்தனையிலும் 
நாம் வென்றோம் என்பது... சரித்திரத்தில் அழிக்கமுடியாத 
பதிவு ஆகும். 

இறுதித் தீர்ப்பாக கடந்த 5.8.2011 அன்று சென்னை உயர் நீதி
மன்றம்  தனது  உத்தரவை  அளித்தது .  அதன்படி உரிய 
அறிவுறுத்தலுடன் 16.8.2011 க்குள் சென்னை பெருநகர 
சிவில் நீதி மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கிட 
வேண்டும் என்று  ஆணையிட்டது . 

இதன் மேல் கடந்த 16.8.2011 அன்று சென்னை பெருநகர
சிவில் நீதிமன்றம் , தோழர். சுந்தரமுர்த்தி & கோ வினரால் 
தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் DISMISS செய்து 
தனது இறுதித் தீர்ப்பை  வெளியிட்டது . எனவே கடந்த
கவரப்பேட்டை மாநில மாநாட்டில் உங்களால் 
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய  நிர்வாகிகள் பட்டியலை 
முறைப்படி அறிவித்தது நம் அகில இந்திய சங்கம்.

அதன்படி நேற்று (2.9.2011)  தமிழக அஞ்சல் நிர்வாகம் 
நம் மாநிலச் சங்கத்திற்கு முறைப்படியான அங்கீகாரம்
வழங்கியது . காலம் கடந்தாலும் நீதியே வென்றது .
ஜனநாயகம் வென்றது.  மக்கள் மன்றம் வென்றது.

ஜனநாயகம் காத்திட , சங்கம் காத்திட, தன் முழு 
பங்களிப்பையும் ஆற்றிய  நம் அகில இந்தியத் தலைவர் 
தோழர். M. கிருஷ்ணன் அவர்களுக்கும் , நம் அகில
இந்தியப் பொதுச் செயலர்  அறிவு ஜீவி  தோழர். KVS
அவர்களுக்கும், 3 1/2 ஆண்டுகளாக ஊண் உறக்கம் 
இன்றி நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளே
வாழ்விடம் என்று எண்ணி , கருமமே கண்ணாக
வெற்றிவாகை சூட, குடும்பத்தையே  மறந்து  
உழைத்த   அகில இந்திய உதவிப் பொதுச் செயலர்
நம் அன்புத் தோழர் A.வீரமணி அவர்களுக்கும்
நம் நெஞ்சார்ந்த நன்றி !

ஜனநாயகம் காத்திட , நம்முடைய ஒவ்வொரு 
இயக்கங்களிலும்  , மாநாடுகளிலும் , தினம் தினம்
நீதி மன்றப் படிக்கட்டுகளிலும்  தன் உடல்,பொருள் , 
ஆவி என அர்ப்பணித்த எண்ணற்ற தோழர்களுக்கும் 
என்றென்றும் நம்  நெஞ்சு நிறை நன்றி !

மாநிலத் தலைவராக  தோழர். J. ஸ்ரீ வெங்கடேஷ்
மாநிலச் செயலராக  தோழர்.  J. இராமமூர்த்தி
மாநிலப் பொருளராக  தோழர்  A.  வீரமணி

தலைமையில் 15 நிர்வாகிகளின் கூட்டுப் பொறுப்பாக
விருப்பு வெறுப்பு இன்றி நம் மாநிலச் சங்கம் ஊழியர் 
குறை தீர்த்திட பாடுபடும்  என்று  உறுதியேற்கிறோம்!

வருங்காலம் நமதாகட்டும் !  சங்கமே பெரிது !
தனி  நபர்  பெரிதல்ல  என்று  இனி வரும்
 நபர்களுக்கும்   உணர்த்தவே  இந்த நெடிய
போராட்டம் என்று  நாளைய வரலாறு
சொல்லட்டும். 

வாழ்த்துகளுடன் 
உங்கள் அன்புத் தோழன் ........ J.R. , மாநிலச் செயலர்.