அன்புத் தோழர்களுக்கு வணக்கம். 29.03.2013 மற்றும் 31.03.2013 ஆகிய விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் , குறிப்பாக காஞ்சிபுரம் கோட்டம் மற்றும் மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்டங்களிலும் , ஊழியர்கள் முழுமையாகப் பணிக்கு வரவேண்டும் என்று தலைமட்ட அதிகாரிகளால் உத்திரவிடப்பட்டது. இது குறித்து காஞ்சி கோட்டத்தில் இருந்து முதல் புகார் NFPE மற்றும் FNPO மாநிலச் செயலர்களுக்கு கிடைக்கப் பெற்றவுடன் இது குறித்து CPMG இடம் பேச மாலை 04.30 மணியளவில் அஞ்சல் மூன்றின் இரண்டு மாநிலச் செயலர்களும் சென்றோம். இதற்குள் கோவை மண்டலத்தின் பல பகுதிகளில் இருந்து இதே போல பல புகார்கள் இருவருக்கும் வந்தன. CPMG இல்லாத காரணத்தால் DPS HQ அவர்களிடம் கடிதம் அளித்து விவாதித்தோம். அவர் உடன் மாநில அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களை தொடர்பு கொண்டு நேரிடையாக இது குறித்து விசாரித்தார். அப்படி எந்த ஒரு உத்திரவும் CPMG அலுவலகத்தின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் அல்லது CCR மற்றும் மேற்கு மண்டலத்தின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் அளிக்கப் படவில்லை என்பதை உறுதி செய்த அதே நேரம் தல மட்டத்தில் அப்படி உத்திரவு இடப்பட்டிருந்தால் உடன் விலக்கிக் கொள்ள உரிய உத்திரவு இடப்படும் என்பதை தெரிவித்தார். அதன் படியே அடுத்த 10 ஆவது நிமிடத்தில் கீழ் மட்டத்தில் இடப்பட்ட உத்திரவுகள் உடன் விலக்கிக் கொள்ளப் பட்டன. ஊழியர்கள் பிரச்சினைகளில் - தேவைக் கேற்ப அவ்வப்போது CPMG இடம் எடுத்துச் சென்று உடன் தீர்த்து வைத்திட முனைப்புடன் செயலாற்றும் அதிகாரியாக நமது DPS HQRS அவர்கள் உள்ளார்கள் என்பதை நாம் மனமாரப் பாராட்டுகிறோம். அவருக்கு நம் நன்றி.
'தடி எடுத்தவரெல்லாம் தண்டல் காரன்' என்ற பழ மொழிக்கு இணங்க தமிழகத்தின் பல பகுதிகளில் தான்தோன்றித்தனமாக பல அதிகாரிகள் இது ஏதோ LIMITED COMPANY போல தற்போது செயல் பட ஆரம்பித்துள்ளனர் என்பது இங்கு சுட்டிக் கட்ட வேண்டியுள்ளது.
CPMG அவர்களின் மாநில நிர்வாகத்திற்கு அடிக்கடி இப்படி களங்கம் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் , இலாக்கா விதிகளுக்கும் , அடிப்படை சட்ட விதிகளுக்கும் மாறாக செயல் படும் இப்படிப் பட்ட அதிகாரிகளை இப்படியே அனுமதித்துக் கொண்டிருக்க கூடாது என்பதை மாநில நிர்வாகத்திற்கு வேண்டுகோளாக வைக்கிறோம்.
இப்படியே போனால் தினம் தினம் போராட்டம் , தினம் தினம் ஆர்ப்பாட்டம் என்று ஊழியர் சக்தி வீணடிக்கப் படுவது மட்டுமல்லாமல் , நிர்வாகத்தின் நேரமும் வீணடிக்கப் பட்டு தொழில் அமைதி கெட்டு , மாநில நிர்வாகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதை இந்த வலைத்தளத்தின் மூலம் சுட்டிக் காட்டுகிறோம். உரிய அதிகாரிகள் CPMG அவர்களின் பார்வைக்கு இந்த செய்தியை கொண்டு செல்ல வேண்டுகிறோம்.