அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ
மன்னித்து விடுவோமே !
குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள சிறந்த பண்பு ஒன்றைக் கேளுங்கள். அது நம்மிடம் இருக்கிறதா என இந்த நோன்பு காலத்தில் சுயசோதனை செய்து கொள்ளுங்கள். அநீதி இழைப்பவர்களை மன்னித்தல் என்பதே அந்த பண்பு. ""நீங்கள் அவர்களுடைய செயல்களை சகித்து புறக்கணித்து விடுவீர்களானால்- மேலும் அவர்களை மன்னிப்பீர்களானால், திண்ணமாக இறைவன் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான்,'' என்கிறது குர்ஆன். இதிலுள்ள "அவர்களுடைய' என்ற வார்த்தை எதிரிகளை மட்டும் குறிப்பிடவில்லை. மனைவி, மக்களையும் குறிக்கிறது. ஒருவனது கருத்தை அவனது மனைவி, குழந்தைகள் கூட புறக்கணிக்கலாம். அவர்களுடைய அச்செயலை பெரிதுபடுத்தாமல், யாரொருவன் மன்னிக்கிறானோ, அவன் மீது இறைவனின் கருணைப் பார்வை விழும். நமக்கு எதிராக நடப்பவர்களை தண்டிக்கும் சக்தி நமக்கு இருக்கலாம். ஆனால்,
"(தண்டிக்கும்) சக்தி பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்ணியத்திற்குரியவர்'' என்கிறது குர்ஆன்.
நமக்கு எதிராகச் செயல்பட்டவர்களையும் மன்னிக்க வேண்டும் என்பதே ரமலான் சிந்தனை..........................
ஜெ. இராமமூர்த்தி, மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று தமிழ் மாநிலம் .