NFPE அஞ்சல் - RMS இணைப்புக்குழுவின் தென் மண்டல கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம் கடந்த 05.01.2014 அன்று காலை சுமார் 10.00 மணியளவில் மதுரை தல்லாகுளம் அஞ்சலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது . கூட்டத்திற்கு அஞ்சல் மூன்றின் தென் மண்டலச் செயலர் தோழர். R .V . தியகராஜபாண்டியன் அவர்கள் தலைமை தாங்கினார். அஞ்சல் நான்கின் மண்டலச் செயலர் தோழர்.முருகேசன், RMS மூன்றின் மண்டலச் செயலர் தோழர். பாலமுருகன், RMS நான்கின் மண்டலச் செயலர் தோழர். செல்வராஜ் , AIPEU GDS NFPE சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர். S . ராமராஜ் ஆகியோர் முன்னிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தை துவக்கி வைத்து அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலரும் , தமிழக அஞ்சல் -RMS இணைப்புக் குழுவின் கன்வீனருமாகிய தோழர். J . ராமமுர்த்தி அவர்கள் உரையாற்றினார்.
கூட்டத்தில் அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, RMS மூன்று , RMS நான்கு , GDS சங்கம் உள்ளிட்ட NFPE அமைப்பின் தென் மண்டலத்தை சேர்ந்த மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட/ கிளைச் செயலர்கள் உள்ளிட்ட சுமார் 60 நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
தென் மண்டல நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கு , ஊழியர்களை கொத்தடிமைகளாக நடத்தும் கொடூரம் , இலாக்கா சட்ட விதிகளை முற்றிலும் மதிக்காத தன்மை, அதிகார போதையில் ஊழியர்களை தன் விருப்பம்போல பந்தாடும் போக்கு , வணிகம் என்ற பெயரில் அஞ்சல் சேவையை சீரழிக்கும் வண்ணம் செயல் படும் போக்கு , அஞ்சலக மூடல், கர்ப்பிணிப் பெண் ஊழியர்கள் விடுப்பு கூட அளிக்காமல் கொடுமைப் படுத்தப்படும் அவலம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்கள். இது குறித்து ஏற்கனவே ஒத்தி வைக்கப் பட்ட போராட்டம் தொடரப்பட வேண்டும் என்றும் அது மேலும் தீவிரப் படுத்தப் பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள் .
எனவே செவிகளை இருக மூடிக் கொண்டு ஒருவழிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் மண்டல நிர்வாகத்தின் கவனத்தை ஊழியர்களின் பிரச்சினைகளின் பால் ஈர்த்திட , பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு கண்டிட எதிர்வரும் 10.01.2014 அன்று தென் மண்டலத்தில் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகள் விடுப்பெடுத்துக் கொண்டு மண்டல அலுவலக வாயிலில் காலை 10.00 மணி முதல் தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்துவது என்று ஏகமனதாகத் தீர்மானிக்கப் பட்டது .
கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த , அனைவருக்கும் உணவு மற்றும் இனிய உபசரிப்புகளை வழங்கிய மதுரை அஞ்சல் மூன்று கோட்டச் சங்க நிர்வாகிகள் , தலைவர் தோழர். முருகேசன், கோட்டச் செயலர் தோழர். S . சுந்தரமூர்த்தி, கோட்ட நிதிச் செயலர் தோழர். K . நாராயணன், கோட்ட உதவிச் செயலர் தோழர். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கோட்டச் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு நம் இணைப்புக் குழுவின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே தென் மண்டலத்தில் உள்ள அனைத்து அஞ்சல் -RMS பகுதியின் பொறுப்பாளர்களும் அவரவர்கள் பகுதியில் இருந்து பெருமளவில் விடுப்பெடுத்துக் கொண்டு இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கொடுமைகளுக்கு முடிவு காண புறப்பட, அஞ்சல் -RMS இணைப்புக் குழுவின் சார்பாக வேண்டுகிறோம்.
போராட்டம் சிறக்கட்டும் !
மூடிக் கிடக்கும் தென் மண்டல நிர்வாகத்தின் கண்களும்,
கருத்தும் திறக்கட்டும் !
கதவுகளைத் தட்டுவோம் ! திறக்கவில்லை என்றால் மீண்டும் மீண்டும் தொடர் போராட்டங்களை நடத்துவோம் !
தொழிற்சங்கத்தின் இறுதிப் போராட்டம் வரை நிச்சயம் செல்வோம் !
போராட்ட வாழ்த்துக்களுடன்
அனைத்து மாநிலச் செயலர்கள் ,
தமிழ் மாநில அஞ்சல் - RMS இணைப்புக் குழு .