Monday, September 22, 2014

SPECIAL MEETING AT PATTUKKOTTAI DIVISIONAL BRANCH ON 21.09.2014 AND DEMONSTRATION


நமது அஞ்சல் மூன்று பட்டுக்கோட்டை கோட்டச் சங்கத்தின் சார்பாக கடந்த 21.09.2014 அன்று மாலை சுமார் 04.00 மணியளவில்  கோட்டத் தலைவர் தோழியர்  V . முத்துலட்சுமி அவர்கள் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. சிறப்புக் கூட்டத்தில் நமது அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J . இராமமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார்கள். 

முன்னதாக 20.09.2014 அன்று மாலை  கோட்ட நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்தும் , இரண்டு ஆண்டுகளாக கோட்ட அலுவலகத்திற்கு மாற்று இடம் எதுவும் பார்க்காமல் , ஊழியர் சங்கங்கள் ஏற்பாடு செய்து கொடுத்த நான்கு இடங்களையும் கோட்டை விட்டு , தற்போது அவசர கதியில்  கடும் இட நெருக்கடி உள்ள தலைமை அஞ்சலகத்தில்  கண்காணிப்பாளர் அலுவலகத்தையும் கொண்டுவந்து இணைக்கும்  கொடும் செயலைக் கண்டித்து பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . அதன் புகைப்பட நகலை கீழே பார்க்கவும். 

கடந்த 2 வருடங்களாக  இருமாதப் பேட்டியில் வைக்கப்பட்டும் , புதிய இடம் பார்க்க TENDER  கோரப்பட்டுள்ளதாக நான்கு முறை சாக்குப் போக்கு கூறி பொது மக்கள் சேவைப் பகுதியை சீரழித்து ,  COUNTER  பகுதியை பாதியாக குறைத்து,  மகளிர் ஓய்வறையை  ஆண்கள் ஓய்வறையுடன்  இணைத்து , பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலக வளாகத்தையே  குப்பைக்காடாக ஆக்கியுள்ள  கோட்ட நிர்வாகத்தின் அடாவடி நடவடிக்கைகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது குறித்து  நம் மாநிலச் செயலர் பேசிய போது , தற்போது வேறு வழியில்லாததால்  இந்த தாற்காலிக இடமாற்றம் நடைபெற்றுள்ள தாகவும் ஊழியர் சங்கங்கள் வேறு இடம்  பார்த்துக் கொடுத்தால்  இடம் மாற்றித் தருவதாகவும்  கோட்டக் கண்காணிப்பாளர் உறுதியளித் துள்ளார்கள்.இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இந்த  நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால்  மாநிலச் சங்கம் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று  மாநிலச் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நேற்று (21.09.2014)  அன்று  மாலை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில்  அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, மற்றும் GDS  சங்கங்களின் பிரதிநிதிகள்  மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். கோட்டச் செயலாளர் தோழர். R .மோகன் அவர்கள் வரவேற்றார்.  மாநிலச் செயலர் தோழர். J .R . கோட்டப் பிரச்சினைகள் குறித்தும் அதன் மீது மாநிலச் சங்க நடவடிக்கைகள் குறித்தும் , ஏழாவது ஊதியக் குழு முன்னர் நமது கோரிக்கைகள் குறித்தும்  எதிர்வரும் 24.09.2014 அன்று  மத்திய JCA  வின் அறைகூவலின் படி நடைபெற உள்ள  தார்ணா  போராட்டம் குறித்தும் விளக்கிப் பேசினார். கோட்டச் சங்கத்தின் முன்னாள் கோட்டச் செயலர்கள் தோழர். P.L. ராஜகோபால் , தோழர்  சேகர் உள்ளிட்ட முன்னணித் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  நிதிச் செயலர் தோழர். N.மகேந்திரன் அவர்கள் நன்றி கூற  கூட்டம் இனிதே இரவு 08.00மணியளவில்  நிறைவுற்றது.