"இன்னமும் அதையே சொல்லாதே அண்ணாச்சி !"
மத்திய அரசிலும், அஞ்சல் துறையிலும் அனைத்திலும் கணினி மயம் ! அரசின் திட்டங்கள் , ஆவணங்கள் மற்றும் தகவல் பெறுவதில் தொழிநுட்பம் ! இணையதளம் , மொபைல் போன் மூலம் புரட்சி ! மோடி அரசின் கனவுத் திட்டம் ! இப்படி மத்திய அரசே மாறும் போது , அதில் பணியாற்றும் நாமும் கொஞ்சம் மாறலாமே ! (கீழே பார்க்க : செய்தி )
அந்தந்த நிமிடமே செய்திகளை , அரசின் உத்திரவுகளை, தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்பார்த்து தினம் வலைத்தளம், FACE BOOK, WHATS APP என்று உலாவரும் இளைய தோழர்கள் ஒருபுறம் !
இன்னமும் எனக்கு மாநில , மத்திய சங்க வலைத்தளமே தெரியாது என்று கூறும் 50 கடந்த தலைமுறை மறுபுறம் ! இது சரியா ? கோட்ட/ கிளைச் செயலர்களே ! தொழிற்சங்க நிர்வாகிகளே ! DIGITAL புரட்சியில் மத்திய அரசே இறங்கும் போது ,
"நாளுக்கு நாள் நாகரீகம் மாறிடும்போது
கொஞ்சம் நாமளுந்தான் மாறிக்கிட்டா அதில தப்பேது?"
என்ற உடுமலை நாராயணகவியின் கவிதை வரிகளுக்கு நாமும் உயிர் கொடுக்கலாமே ? சிந்திப்போம் ! செயல்படுவோம் !
புதுடில்லி: ஜூலை 1: இணையதள வசதியுள்ள கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்தி, அரசிடம் இருந்து பொதுமக்கள் சான்றிதழ்கள் மற்றும் தகவல்களை எளிதாக பெறும், அதுபோன்றே, அரசின் திட்டங்கள், கொள்கைகள், செயல்பாடுகள் போன்றவற்றை இந்த சாதனங்கள் மூலம், பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில் நேற்று அறிமுகம் செய்தார்.
திட்டம் இது தான்!
* அதிவேக இணைய இணைப்பு, மொபைலில் இணையத்தை இணைப்பது, இ- - கவர்னென்ஸ் முறையில் அரசு திட்டங்கள் செயல்படுவது, அரசின் தகவல்கள் அனைத்தும், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம், நேரடியாக மக்களை சென்றடைவது.
* 'டிஜிட்டல் லாக்கர்' முறையில், மக்களின் ஆவணங்களை, டிஜிட்டல் முறையில் கையாளுதல். இதனால் ஆவணங்களை பாதுகாப்பது எளிதாகிறது. இதன் மூலம், அனைத்து வேலைகளுக்கும் ஆவணங்களை, இணையம் மூலம் பயன்படுத்த முடியும்.
* அரசு நிர்வாகம், துாய்மை இந்தியா திட்டம் போன்ற திட்டங்களுக்கு, மொபைல் போன் அப்ளிகேஷன் தரப்படும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தியே திட்டங்களின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.
* 'ஆதார்' கார்டை அடிப்படையாக கொண்டு, இ - -சைன் எனப்படும், எலக்ட்ரானிக் கையெழுத்து முறை உருவாக்கப்படும். அந்த கையெழுத்தையே, இணையம் மூலம், அரசின் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.
* 'இ - -ஹாஸ்பிடல் அப்ளிகேஷன்' அறிமுகப்படுத்தப்படும். இதில், இணையம் மூலம் விவரத்தை பதிவு செய்து, மருத்துவரின் அப்பாய்ன்மென்ட், கட்டணம், மருத்துவ அறிக்கை, ரத்த வங்கி இருப்பு ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
* மத்திய அரசு வழங்கும், மாணவர்கள் கல்வி உதவித்தொகையை, இணையம் மூலம் விண்ணப்பித்து பெறலாம்.
* வரும், 2019க்குள், 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு, 'பாரத் நெட்' என்ற பெயரில் அதிவேக இணையம் கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம், என்.எஸ்.என்., (நெக்ஸ்ட் ஜெனரேஷன் நெட்வொர்க்) என்ற அதிவேக இணையத்தை, பி.எஸ்.என்.எல்., அளிக்க இருக்கிறது.
* பள்ளி, கல்லுாரி, பல்கலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், தகவல் தொடர்புக்காக, இலவச, வை- - பை வசதி அளிக்கப்படும்.
* இதுபோன்ற முயற்சிகளால், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சுகாதாரம், கல்வி, வேளாண்மை, வங்கித் துறை ஆகியவற்றின் வளர்ச்சியும்சிறப்பாக இருக்கும்.
18 லட்சம் புதிய வேலைகள்:
டில்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, நாட்டின் முன்னணி தொழிலதிபர்களான, 'ரிலையன்ஸ்' நிறுவன தலைவர்கள், முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, 'விப்ரோ' நிறுவனத்தின், அஜிம் பிரேம்ஜி, 'டாடா' குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி, 'ஆதித்ய பிர்லா' குழுமத்தின் குமாரமங்கலம் பிர்லா ஆகியோர், 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, முதலீடு செய்யஉள்ளதாக உறுதியளித்தனர்.இதன் மூலம் நாட்டில், புதிதாக, 18 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என, பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
மூன்று கொள்கைகள்:
1 டிஜிட்டல் கட்டமைப்பு, ஒவ்வொரு இந்திய குடி மகனையும் சென்றடைதல்.
2 மக்கள் கோரிக்கை அடிப்படையில் நிர்வாகம், திட்டங்கள் மற்றும் சேவைகள் செயல்படுதல். 3 மக்களை, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஊக்குவித்தல்.
நோக்கம் இது தான்!
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்தவும், அரசின் திட்டங்களை மக்களுக்கு, கம்ப்யூட்டர், இணையதளம் போன்ற நவீன முறையில் எடுத்துச் செல்லவும், அது தொடர்பான தகவல் தொழில்நுட்பத்தை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறப்பான நிர்வாகம், அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை கிடைக்கும். எலக்ட்ரானிக்ஸ் சேவைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு பெருகும்.
இடைவெளி குறையும்:
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, இப்போதைய, 6 - 8 சதவீதம் என்ற அளவில் இருப்பதை திருப்திபட்டுக் கொள்ள முடியாது. 8 - 10 சதவீதமாக இலக்கு நிர்ணயித்து, அதை அடைய பாடுபட வேண்டும்; வறுமையை வெல்ல வேண்டும். டிஜிட்டல் இந்தியா திட்டம் சக்தி வாய்ந்தது. ஐந்து மாத காலத்தில், 16 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகளை நம்மால் துவக்க முடிந்துள்ளது; 13 கோடி பேரின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது; 11 கோடி காப்பீட்டு பாலிசிகள் வழங்கப்பட்டுள்ளன. மாறிவரும் உலக பொருளாதார நிலை மற்றும் சூழ்நிலைக்கு நம்மை தயார்படுத்துவது தான், டிஜிட்டல் இந்தியா திட்டம். இது, தொழில்நுட்பத்தின் சக்தி. ஏழை - பணக்காரர் இடைவெளியை குறைக்கும்.
அருண் ஜெட்லி, நிதி அமைச்சர், பா.ஜ.,
லஞ்சம் ஒழியும்: மோடி
டிஜிட்டல் இந்தியா வாரத்தை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாட்டில், டிஜிட்டல் புரட்சி ஏற்பட வேண்டும். அதன் மூலம், லஞ்சம், ஊழலை நாட்டை விட்டே அகற்ற முடியும். வெளிப்படையான, ஒளிவு மறைவற்ற நிர்வாகத்தை வழங்க முடியும். பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமான இடைவெளி நீங்கும். 'இ - கவர்னன்ஸ்' எனப்படும், மின்னணு நிர்வாகத்திலிருந்து, 'எம் - கவர்னன்ஸ்' எனப்படும், (மோடி கவர்னர்னன்ஸ் அல்ல), மொபைல் நிர்வாகத்திற்கு மாற வேண்டும்.கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் பல நன்மைகள் இருந்தாலும், அதில் நிறைய ஆபத்தும் உள்ளது. பெரிய படிப்பு எதுவும் படிக்காதவர்கள் கூட, ஆயிரக்கணக்கான கி.மீ.,க்கு அப்பால் இருந்து, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை சுரண்டி விட முடியும்.தகவல் தொழில்நுட்பத் துறையில் நாம் சிறந்து விளங்குகிறோம்; இன்னும் அதிகமாக முன்னேற வேண்டும். அதற்கான திறன் இந்தியாவில் உள்ளது.இவ்வாறு, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.