வட சென்னை கோட்டத்தில் மெத்தனமாக இருக்கும் நிர்வாகத்தை எதிர்த்து JCA சார்பில் இரண்டு கட்ட போராட்டம் அறிவித்து இரண்டாவது கட்டமாக , கடந்த 12.09.2013 அன்று கோட்ட அலுவலகம் முன்பாக முழு நாள் தர்ணா போராட்டம் நடத்தினர் .
இந்த சூழ்நிலையில் கடந்த 14.09.2013 அன்று காலை சுமார் 10.30 மணியளவில் பார்க்டவுன் தலைமை அஞ்சலகத்தின் இரண்டாவது மாடியில் , கட்டிடத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென்று பெயர்ந்து கீழே விழுந்தது . இது ஏதோ சிறு காரை பெயர்வு அல்ல. கிட்டத்தட்ட 4'x 4' க்கு செரித்துப்போன கம்பிகளுடன் கூடிய ஒரு பெரிய கூரையின் பகுதி ஆகும். இப்படி பல இடங்களில் ஏற்கனவே ஆங்காங்கே பலமுறை பெயர்ந்து விழுந்துள்ளன. இரண்டு புறத்திலும் உள்ளம் பில்லர் களை இணைக்கும் BEAM கள் பாளம் பாளமாக வெடித்து அதன் கம்பிகள் இற்றுப் போய் தலைக்கு நேரே தொங்குகின்றன .
அதன் கீழே சரியாக அமர்ந்திருப்பவர் APM SO SB திரு . சங்கரன் அவர்கள். நல்ல வேளையாக அவர் அருகாமையில் உள்ள ஊழியர் அழைத்ததால் அப்போதுதான் எழுந்து நகர்ந்திருக்கிறார். அவர் அமர்ந்திருந்த இடத்தில் இந்த மேல் சுவர்ப் பெயர்வு தடாலென விழுந்து , அவரது நாற்காலி உடைந்து நொறுங்கியது. அவர் அங்கே அந்த நேரத்தில் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் ? அந்த நாற்காலிக்கு நேர்ந்த கதிதானே ஆகியிருக்கும் ? அவர் உயிருக்கு உத்திரவாதம் ? இதன் புகைப்படங்களை கீழே பார்க்கவும் .
இப்படி மோசமாக உள்ள கட்டிடத்தில் தினம் தினம் ஊழியர்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றுகின்றனர். பலமுறை போராடியும் இந்த கட்டிடத்தை பழுது பார்க்க பணிக்கப் பட்ட CIVIL WING கடந்த ஆறு மாதமாக மெத்தனமாக இருந்துள்ளது. இடையில் ஏற்பட்ட மழைகளில் தண்ணீர் மேலிருந்து இந்த பிளவுகள் வழியாக கீழே ஆறாக ஓடிக் கொண்டிருப்பதைக் கண்ணுற்றும் கோட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு ஏதும் செய்திட வில்லை .
இந்த நிகழ்ச்சிக்குப் பின் தற்போது மேலே கொத்தி விட்டு PATCH WORK செய்திட ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக நிர்வாகம் கூறுகிறது.
இதற்கு ஆகும் செலவு 11.5 லட்சமாம் . இதனை சிவில் விங் பொறுப்பேற்றிருக்கிறது .இதை நிச்சயம் ஏற்க முடியாது . "ரமணா " திரைப்படம் போல, கட்டிட CONTRACT இல் உயிருடன் விளையாட்டினை நாம் அனுமதிக்க முடியாது !
கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள BRANCH களை வாடகை மாற்றுக் கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்து விட்டு, கம்பிகள் செரித்து BEAM கள் தொங்கிக் கொண்டுள்ளதால் , புதிதாக மதிப்பீடு செய்து மேற் கூரை மற்றும் BEAM கள் புதிதாக REINFORCED CONCRETE செய்திட வேண்டும் என்று மண்டல மற்றும் மாநில நிர்வாகத்தை நம் மாநிலச் சங்கம் வேண்டுகிறது .
இல்லையேல் மாநிலச் சங்கமே போராட்டத்தில் இறங்கும் என்பதை நிர்வாகத்திற்கு இந்த வலைத் தளத்தின் செய்தி மூலம் தெரிவிக்கிறோம். உடனடி தேவை போர்க்கால நடவடிக்கை - மாநில நிர்வாகத்திடம் எதிர்பார்க்கிறோம். மண்டல PMG அவர்கள் இதனை நன்கு உணர்ந்தவர் என்பதால் உடன் அதற்கான பரிந்துரையை அவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கிறோம்.