Wednesday, January 28, 2015

PL EXTEND SOLIDARITY SUPPORT TO OUR P4 UNION PROGRAMME

அன்புத் தோழர்களுக்கு வணக்கம். கடந்த 26.01.2015 அன்று திருச்சியில் நடைபெற்ற  அஞ்சல் மூன்று மற்றும்  GDS  சங்கங்களின்  மாநில அளவிலான கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தில், தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளை  தீர்த்து வைத்திடக் கோரியும், நிர்வாகத்தின்  தொழிலாளர் அடக்கு முறைக்கு எதிரான  போக்கினை கண்டித்தும்,  தொழிற்சங்க பழி வாங்கும் போக்கினை  கடைப்பிடிக்கும் தென் மண்டல நிர்வாகத்தை கண்டித்தும்  தமிழகம் தழுவிய அளவில் வேலை நிறுத்தம் உள்ளிட்ட மூன்று கட்ட போராட்டத்தினை நடத்திடுவது என்று ஒரு மனதான தீர்மானம்,  அஞ்சல் மூன்று  மற்றும் GDS  சங்கங்களால் நிறைவேற்றப் பட்டுள்ளது என்பதை  முன்னோட்டமாக  தெரிவித்துக் கொள்கிறோம். விரிவான விபரங்கள்  நாளை வெளியிடப்படும். 

ஏற்கனவே தமிழக அஞ்சல் நான்கு சங்கத்தால்,  தேங்கிக்கிடக்கும் கோரிக்கைகளை தீர்த்திடக் கோரி, இன்றைய தேதியில்  தமிழகம் தழுவிய அளவில் அனைத்து கோட்ட அலுவலகங்களுக்கு முன்பாக  ஆர்ப்பாட்டம் நடத்திட  அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே  நம்முடைய  தமிழக அஞ்சல் மூன்று சங்கம் சார்பாக அந்தப் போராட்டத்திற்கு  தார்மீக ஆதரவை அளித்திடுமாறு  அனைத்து  அஞ்சல் மூன்று கோட்ட / கிளைச் செயலர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், கடந்த பிப்ரவரி 12, 13 - 2014 தேதிகளில் நடைபெற்ற அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு அதனை முழுமையாக, வெற்றிகரமாக நடத்திய  கல்பாக்கம் அணு மின்  ஊழியர் சங்கத் தலைவர்களை, அதன்  நிர்வாகம்  தாற்காலிக  பணி நீக்கம் செய்துள்ளதை கண்டித்து,  இன்று அகில இந்திய அளவில் கண்டன நாள்  கடைப்பிடிக்கப்படுகிறது . அதற்கான  கூட்டம் இன்றைய  தேதியில் மதியம் 01.00 மணியளவில் சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழக மத்திய அரசு ஊழியர்  மகா சம்மேளனத்தின் சார்பாக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.  அதற்கும் நம்முடைய  தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் ஆதரவை  நாம்  வெளிப்படுத்துவோம். 

நிர்வாக இயந்திரத்தின் காட்டு தர்பாரை கட்டுக்குள் கொண்டு வருவோம் !. அனைத்து  மத்திய அரசு ஊழியர்  சங்கங்களும் ஒன்று சேர்ந்து  போராட்டப் பாதையில் பயணிப்போம் ! 
ஊழியர் நலன் காப்போம் !