நவம்பர் 26/ 2020 அகில இந்திய பொது வேலை நிறுத்தம்.
மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள் பங்கேற்பு
இந்தியாவின் ஒட்டுமொத்த உழைக்கும்வர்க்கம் பங்குகொள்ளும் மாபெரும் நாடுதழுவிய வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்களும் கலந்து கொள்கிறார்கள்.
சென்னையில் செய்தியாளர் களை சந்தித்த மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன் கூறியதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மக்கள் விரோத, அரசு ஊழியர் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோடிக் கணக்கான அரசு ஊழியர்களும் தொழிலாளர்களும் வரும் நவம்பர் 26ஆம் தேதி நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள்.
கடந்த முறை நடந்த வேலை நிறுத் தத்தில் 20 கோடிபேர் பங்கேற்றனர். இந்த முறை சுமார் 25 கோடி பேர் வரை கலந்து கொள்வார்கள்.
100 ஆண்டுகால போராட்ட வரலாறு கொண்ட அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூலை வரை நிறுத்தப்பட்டு, ஏறக்குறைய 37,000 கோடி ஏற்கனவே பறிக்கப்பட்டுள்ளது.
தற்போது அகவிலைப்படி கணக்கிடும் முறையை மாற்றியதால் மேலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மத்திய அரசு ஊழியர்களிட மிருந்து பறிக்கப்படும்.
34 லட்சம் ஊழியர்களில் 21 லட்சம் பேர் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந் துள்ளனர். இவர்களுக்கு ஓய்வூதியம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.
ஏனென்றால் இவர்களது ஓய்வூதிய பணம் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.கொரோனா வந்த பிறகு பங்கு சந்தையில் 20 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 90 லட்சம் பேர் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் சூழலில், தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களை நியமிக்காமல், வட இந்தியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
இதனால் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது. இந்தி தெரிந்த ஒருவர் தமிழில் எழுதப்பட்டிருக்கும் கடிதத்தை எப்படி விநியோகிப்பார் என கேள்வி எழுப்பினார்
.
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின்புதான் அழுக்கு சட்டைக்கார னும், ரிக்ஷாகாரனும் வங்கிக்கு உள்ளே போக முடிந்தது. ஆனால் மத்திய அரசு மீண்டும் வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
2025ஆம் ஆண்டிற்குள் 500 ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ரயில்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் எப்படி விடுமுறை அல்லது பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்தி கொள்ளை அடிக்கப்படுகிறதோ அதே நிலை ரயில் பயணத்திற்கும் ஏற்படும்.
எனவே புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப்பெற வேண்டும், அரசு ஊழியர்களை எந்தவித விசாரணையுமின்றி வீட்டுக்கு அனுப்பும் 56 ஜெ பிரிவை நீக்க வேண்டும், ஊழியர்விரோத, தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்,
நிறுத்தி வைக்கப் பட்டுள்ள அகவிலைப்படியை உடனடியாக விடுவிக்க வேண்டும், கிராமப்புற அஞ்சலக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், மக்களின் வரிப்பணத்தில் உருவான பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் வழங்கக் கூடாது,
7ஆவது ஊதியக்குழு சம்மந்தமாக 30.6.2016இல் மூத்த மத்திய அமைச் சர்கள் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் 1.5 லட்சம் ஊழியர்களும், நாடு முழுவதும் 12.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் முழுமையாக கலந்து கொள்கிறார்கள்.
வேலை நிறுத்தத்தை விளக்கி வரும் 6ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களிலும், 19ஆம் தேதி சென்னையிலும் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது.தமிழகத்தில் இப்போராட்டங்களில் வருமானவரித்துறை, தபால் துறை, பாதுகாப்பு துறை, சாஸ்திரி பவன் ஊழியர்கள், ராஜாஜி பவன் ஊழியர்கள், ஏஜி அலுவலக ஊழியர்கள், கல்பாக்கம் அணுமின் நிறுவன ஊழியர்கள், மத்திய காலால் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து துறை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் உட்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.
மத்திய அரசின் அரசு ஊழியர் விரோத, தொழிலாளர்விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக நடக்க இருக்கும் இந்த போராட்டத்திற்கு சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும், பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.